சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ, பாதுகாப்பை விரிவாக்கம் செய்யும் மலேசிய அரசாங்கத்தின் திட்டத்தை அத்தொழிலாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
நேற்று நடைபெற்ற தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், முதற்கட்டமாக சிங்கப்பூரில் பணிபுரியும் 4 லட்சம் மலேசியர்களுக்கு சொக்சோ பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இதற்காக 'சுயதொழில் சமூக பாதுகாப்புச் சட்டம்' திருத்தப்பட உள்ளது என்பதையும் பிரதமர் கோடிகாட்டியுள்ளார்.
தினமும் மோட்டார் சைக்கிள்களில் எல்லை தாண்டிச் செல்லும் தொழிலாளர்கள், விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் காலங்களில் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். நிறுவனங்கள் வழங்கும் காப்புறுதி சலுகை வேலை நேரத்திற்கு மட்டுமே பொருந்தும் நிலையில், சொக்சோவின் இந்தப் புதிய திட்டம் தங்களுக்கு ஒரு வலுவான பாதுகாப்பு வலையாக அமையும் என தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சொந்த நாட்டின் இந்த ஆதரவு, தங்களின் எதிர்கால அச்சத்தைப் போக்கியுள்ளதாக சிங்கப்பூர் வாழ் மலேசியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.








