ரிங்கிட் 200 மில்லியன் மதிப்பிலான வரிச்சலுகையைப் பெற போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகச் சந்தேகிக்கப்படும் நிறுவன மேலாளர் மீதான விசாரணையில், ரிங்கிட் 25 மில்லியன் மதிப்புள்ள 25 சொகுசு வாகனங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.
அலுவலகங்கள் மற்றும் சந்தேக நபரின் வீடுகள் உட்பட 12 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரது நான்கு தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் மூன்று நிறுவனக் கணக்குகளில் இருந்த சுமார் ரிங்கிட் 30 லட்சமும் முடக்கப்பட்டது.
40 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் ஆரம்ப தடுப்புக்காவல் இன்று முடிவடைந்த நிலையில், மேலும் மூன்று நாட்களுக்கு, அதாவது வரும் 6ஆம் தேதி வரை காவலை நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 முதல் 2026ஆம் ஆண்டு வரை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 480 நிறுவனக் கணக்குகளை முறைகேடாகக் கையாண்டு வரிச்சலுகை பெற்றதுடன், அமலாக்கத் துறை அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் வழங்கியதாகவும் அவர் மீது சந்தேகம் உள்ளது.
இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் 16ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.








