செத்தியாவங்சா-பந்தாய் விரைவுச்சாலையில் அதிவேக மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான வகையில் இரு ஆடவர்கள் செய்த சாகசம் , சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
31 மற்றும் 36 வயதுடைய அந்த இருவரும் விசாரணைக்காக காலை 6 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவர் முகமது ஜம்ஜூரி முகமது ஈசா தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது கடந்த மே 9-ஆம் தேதி, காலை 11 மணியளவில், நகரத்தின் மையத்திலிருந்து புத்ராஜெயா நோக்கிச் செல்லும் SPE நெடுஞ்சாலையில் நடந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.








