கோலாலம்பூர், நவம்பர்.04-
பூடி95 திட்டத்தின் கீழ், இ-ஹெய்லிங் வாகன ஓட்டுநர்களுக்கான மாதாந்திர அளவை, 800 லிட்டர்களாக உயர்த்த அரசாங்கம் தயாராகி வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர்கள் மாதந்தோறும், 600 லிட்டர்கள் பெற்று வரும் நிலையில், 58,000 ஓட்டுநர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இ-ஹெய்லிங் துறையைச் சேர்ந்த சிலர், மாதந்தோறும் 600 லிட்டர்கள் போதுமானதாக இல்லை என்று கூறி வருவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தில் இது குறித்துப் பேசிய அன்வார், மாதந்தோறும் 600 லிட்டர்கள் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை என்பது உறுதியானால், அதனை உயர்த்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது 5,000 கிலோ மீட்டர்களை உள்ளடக்கியது என்று கூறியுள்ள அன்வார், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.








