புத்ராஜெயா, டிசம்பர்.26-
1எம்டிபி வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், குற்றவாளியே என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனைக் காலம், எஸ்ஆர்சி இண்டர்நெஷனல் வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனைக் காலத்துடன் ஏக காலத்தில் அமலுக்கு வர வேண்டும் என்று நீதிமன்றத்தில் இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
1எம்டிபி வழக்கில் நஜீப்பிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் அவருக்கான தண்டனை மற்றும் அபராதத் தொகை குறைக்கப்பட வேண்டும் என்று நஜீப்பின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
நஜீப்பிற்கு 72 வயதாகிறது. எஸ்ஆர்சி இண்டர்நெஷனல் வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட 12 ஆண்டு காலத் தண்டனை 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலம் அவர் தண்டனையை அனுபவித்து விட்டார்.
இந்நிலையில் 1எம்டிபி வழக்கில் அவருக்கு விதிக்கக்கூடிய தண்டனைக் காலம், புதிதாக தொடங்க வேண்டுமானால், அவர் சிறையில் இருக்கும் காலம் நீளும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுஏராவை வழக்கறிஞர் ஷாஃபி கேட்டுக் கொண்டார்.








