Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆர்.டி.எம். முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆரோக்கியசாமி காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆர்.டி.எம். முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆரோக்கியசாமி காலமானார்

சிலாங்கூர்,அக்டோபர் 02-

RTM மின்னல் எப். எம். தமிழ் வானொலியின் முன்னாள் மூத்த அறிவிப்பாளரும், செய்தி வாசிப்பாளரும், நிகழ்ச்சி தயாரிப்பாளருமான S. ஆரோக்கியசாமி காலமானார். அவருக்கு வயது 89.

ஆர்.டி.எம். தமிழ் வானொலி நேயர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சி தயாரிப்பாளராக விளங்கியவரான ஆரோக்கியசாமி சவரிமுத்து, இன்று அதிகாலை 5.45 மணியளவில் சைபர்ஜெயா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மூன்று புதல்விகள் உள்ளனர்.

ஆர்.டி.எம்.முன்னாள் மூத்தப் பணியாளர்களில் ஒருவரான ஆரோக்கியசாமி, பேரா, தாப்பாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
50 ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் மலேசிய வானொலி நிலையம், கோலாலம்பூர் ஃபெடரல் ஹவுஸ்-ஸில் செயல்பட்ட போது, ஆரோக்கியசாமி வானொலி மற்றும் நேயர்களுடன் தன்னை பிணைத்துக்கொண்டவர் ஆவார்.

இளைஞர் உலகம், ஐ.நா.பேசுகிறது, இதயத்தில் இடம்பெற்றவை போன்ற நேயர்களின் அபரிமித ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்ற நிகழ்ச்சிகளை ஆரோக்கியசாமி தயாரித்து அளித்து, தமிழ் ஒலிபரப்பிற்கு பெருமை சேர்த்தவர் ஆவார்.

ஜோகூர், மலாக்கா மற்றும் ஈப்போ போன்ற வட்டார வானொலி ஒலிபரப்பு நிலையங்களில் பணியாற்றிவரான ஆரோக்கியசாமி, தமிழ் வானொலி ஒலிபரப்பு நிர்வாகத்தில் இரண்டாம் நிலை உயர் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஒலிபரப்பில் பரந்த அனுபவத்தை கொண்டவரான ஆரோக்கியசாமி, ஆர்.டி.எம். மிலிருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு பணி ஓய்வுப்பெற்றப்பின்னரும் வானொலியில் தமிழ் செய்திப்பிரிவில் செய்தி ஆசிரியராகவும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர் ஆவார்.

ஒலிபரப்புத்துறையில் ஈடுபட்டிருந்த முன்னாள் அறிவிப்பாளர்களின் வாழ்க்கை குறிப்புக்களையும் தமிழ் நாளிதழில் கட்டுரையாக எழுதி வந்துள்ளார்.

பணியாளர்கள் மத்தியில் மிகுந்த மரியாதைக்குரியவராக விளங்கிய ஆரோக்கியசாமி, அதிர்ந்துப் பேசியதை பார்த்ததே இல்லை. அந்த அளவிற்கு மென்மையாக இளகியமனதுடன் பேசக்கூடிய ஒரு மாண்புக்குரிய மனிதர் ஆவார். அவரின் இழப்பு ஒலிபரப்புத்துறைக்கு பேரிழப்பாகும் என்று முன்னாள் மூத்த செய்தி வாசிப்பாளர் அசான் கனி வர்ணித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆரோக்கியசாமியின் துணைவியார் மறைந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கு நாளை செப்டம்பர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. அவரின் இல்ல முகவரி எண்.27, ஜலான் மெலாட்டி, 15, தமன் ஸ்ரீ மெலாட்டி, பத்து கேவ்ஸ் என்பதாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →