கோல திரங்கானு, அக்டோபர்.22-
திரங்கானு, கோல நெருஸ், பாடாங் ஆயர் தேசியப் பள்ளிக்கு அருகில் இன்று நண்பகல் 1.30 மணியளவில், போக்குவரத்து விதிமீறல்களுக்காகப் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன், ஒரு லாரி உரிமையாளர் தனது வாகனத்திற்குத் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த லாரியை வயது குறைந்த இளையோர் ஒருவன் ஓட்டியுள்ளான். மேலும் அதன் மோட்டார் வாகன உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியாகி இருந்ததுடன், 2023 முதல் புஸ்பாகோம் சோதனையிலும் தேர்ச்சி பெறவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததாக திரங்கானு மாநில சாலைப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் முகமட் ஸம்ரி சமியோன் தெரிவித்தார்.
உரிமையாளர் ஒத்துழைக்க மறுத்து, லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய இந்தச் செயல், சட்டத்தை மீறியது மட்டுமன்றி, போக்குவரத்துத் துறை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்தின் கீழ் காவற்படை விசாரித்து வருகிறது.








