Jun 28, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் போலி மருத்துவர்களாக வலம் வந்த 6 பேர் உட்பட 18 வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் போலி மருத்துவர்களாக வலம் வந்த 6 பேர் உட்பட 18 வெளிநாட்டினர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.14-

கோலாலம்பூர், புடு பகுதியில் உரிமம் இன்றி மருத்துவச் சேவைகளை வழங்கி வந்த 17 வங்காளதேசத்தவர் மற்றும் ஒரு மியான்மர் பிரஜை என 18 வெளிநாட்டு ஆடவர்களைக் குடிநுழைவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஆறு பேர் போலியான மருத்துவர்கள் ஆவர். பெர்னாமா வெளியிட்ட தகவலின்படி, இரண்டு வார கண்காணிப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில், பலசரக்குக் கடைகள் மற்றும் சலூன்களுக்குப் பின்னால் இயங்கிய சட்டவிரோத மருத்துவ மையங்கள் கண்டறியப்பட்டன.

சுகாதார அமைச்சின் அங்கீகாரம் இல்லாத நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், சிறப்பு மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, வெளிநாட்டவர்களுக்கு மலிவான விலையில் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இவர்கள் தங்களின் சொந்த நாட்டு மொழியிலேயே உரையாட முடிவதால் பல வங்காளதேச நாட்டினர் இவர்களிடம் சிகிச்சை பெற ஆர்வம் காட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குடிநுழைவுத் துறையின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் சுகாதாரத் துறையின் மருந்தக அமலாக்கப் பிரிவு இணைந்து நடத்திய இந்தச் சோதனையில், முறையாகப் பதிவு செய்யப்படாத வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டப்பூர்வமான வணிகங்கள் போல நடித்து, பின்புற அறைகளில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து இவர்கள் பொதுமக்களின் உயிருடன் விளையாடியது அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது என்று குடிநுழைவுத்துறையின் செயலாக்கப் பிரிவிற்கான தலைமை துணை இயக்குநர் லொக்மான் எஃபெண்டி ரம்லி தெரிவித்தார்.

Related News

கோலாலம்பூரில் போலி மருத்துவர்களாக வலம் வந்த 6 பேர் உட்பட ... | Thisaigal News