Aug 13, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுக் இந்தான், ஜாலான் படாங் டெம்பாக்கில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பதின்ம வயதுடைய இரு பெண்கள் பலியான சம்பவத்தில் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் வாகனத்தை செலுத்தியதாக 28 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் தனியார் துறையில் பணிபுரியும் அலெக்ஸ் ராபர்ட் என்ற அந்த ஆடவர், ஸ்ரீ செத்தியா இடைநிலைப்பள்ளி அருகில் உள்ள பிரதான சாலையில் 17 வயது நூர் தானியா அரிசா சலிம் மற்றும் 16 வயது நூர் அட்டிகா அப்துல்லா ஆகிய இரு பெண்களுக்கு மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் நைடாத்துல் அதிரா அசுமான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அலெக்ஸ் ராபர்ட்டிற்கு எதிரான கொலை குற்றச்சாட்டு, உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவதால் அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அந்த நபர் மீது, 7 வயது சிறுவனையும், 50 வயது நபரையும் காரால் மோதித் தள்ளி காயத்தை விளைவித்ததாக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தன்று அந்த நபர் பென்சோடியாசெபின் எனும் போதைப்பொருளை உட்கொண்டது, சிறுநீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News