கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-
பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதை நிர்மாணிப்புத் திட்டம் தொடர்பான லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராகத் திரும்புவதற்கு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்ததாகக் கூறப்படும் வாதத்தைத் தொழிலதிபர் டத்தோ ஶ்ரீ ஜி. ஞானராஜா வன்மையாக மறுத்துள்ளார்.
பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவானுக்கும், தனக்கும் எந்தவொரு விரோதமும் இல்லை என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதின்றத்தில் நடைபெற்ற லிம் குவான் எங்கிற்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்கையில் பிரபல தொலைக்காட்சி பிரபலம் கீதாஞ்சலியின் கணவரான ஞானராஜா மேற்கண்டவாறு கூறினார்.
லிம் குவான் எங்கிற்கு எதிராக சாட்சியம் அளிப்பதற்கு அதிகாரிகளுடன் இணைந்து ஞானராஜா ஓர் உடன்பாடு செய்திருக்க வேண்டும் என்று லிம்மின் வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர் முன் வைத்த வாதத்தை ஞானராஜா மறுத்தார்.
மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் ஞானராஜாவிற்கு எதிராக ஒரு வழக்கு இருந்ததாகவும், அந்த வழக்கில் சமரசம் காண்பதற்கு அதிகாரிகளுடன் ஓர் உடன்பாட்டை ஞானராஜா கொண்டு இருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே ஞானராஜாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அந்த விவகாரத்தில் தாம் உடன்பாடு காணவில்லை என்று ஞானராஜா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








