Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஹோட்டல் அறையில் ஒரு பெண்ணுடன் இருந்தது நான் அல்ல: டத்தோ ங் சூ லிம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

ஹோட்டல் அறையில் ஒரு பெண்ணுடன் இருந்தது நான் அல்ல: டத்தோ ங் சூ லிம் விளக்கம்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.15-

ஹோட்டல் அறையில் ஒரு பெண்ணுடன் தாம் தனியாக இருந்ததாகக் கூறி, கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி தமது அலுவலகத்திற்கு தபால் மூலம் ஒரு கடிதம் வந்ததாகவும், அந்தக் கடிதத்தில், ஒரு வீடியோவின் போலி ஸ்கிரீன்ஷாட் இருந்தது என்றும் சிலாங்கூர் மாநில ஊராட்சித்துறை மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சூ லிம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவைத் தமது குடும்பத்தினர் பார்த்தால் தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்றும், அவ்வாறு இடையூறு செய்யத் தாங்கள் விரும்பவில்லை என்றும், தங்களுடன் உடனடியாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக டத்தோ ங் சூ லிம் குறிப்பிட்டார்.

ஒரு ஹோட்டல் அறையில் ஆடை இல்லாமல் அறிமுகமில்லாத ஒரு பெண்ணுடன் தாம் இருப்பது போல் தமது படத்தை இணைத்து ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த வீடியோ ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இது உண்மையிலேயே ஒரு போலி ஸ்கிரீன்ஷாட் என்றும், ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள நபர் தாம் அல்ல என்றும் டத்தோ ங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் போலீஸ் துறையிடம் தாம் புகார் அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இது போன்ற அவதூறு மற்றும் மிரட்டல் முயற்சிகள் தமது தனிப்பட்ட பாதுகாப்பையும், தமது குடும்பத்தையும் இடரில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல் தமது நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று டத்தோ ங் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News