கோலாலம்பூர், டிசம்பர்.24-
உலகளாவிய ரீதியில் தைவான், தைப்பேவில் நடைபெற்ற அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 24 மாணவர்கள், 80 தங்கப் பதக்கங்களைக் குவித்து, மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். பல்வேறு உலக நாடுகளின் கடுமையானப் போட்டிகளுக்கு மத்தியில், நமது நாட்டுத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தியுள்ள இந்த இமாலயச் சாதனை, மலேசிய மாணவர்களின் திறன் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதையே காட்டுகிறது.
இருப்பினும், இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய இளம் சாதனையாளர்களை அங்கீகரிப்பதில் கல்வி அமைச்சு காட்டி வரும் மெத்தனப் போக்கு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், இன்று வரை இந்த மாணவர்களுக்கு ஒரு சிறு வாழ்த்தையோ அல்லது பாராட்டையோ தெரிவிக்காதது ஏன் என்கிற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் மாணவர்களின் திறமைகளை இனம், மொழி கடந்து ஊக்குவிக்க வேண்டியது ஒரு கல்வி அமைச்சின் கடமையாகும். ஆனால், சர்வதேச மேடையில் மலேசியக் கொடியை ஏந்திப் பெருமை சேர்த்த இந்த மாணவர்களின் உழைப்பை அங்கீகரிக்கத் தவறுவது, அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் புறக்கணிக்கிறதோ என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.
முற்போக்கான ‘மலேசியா மடானி கொள்கையின் கீழ், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பும் அங்கீகாரமும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்த உலகளாவிய சாதனைக்குக் கல்வி அமைச்சரிடமிருந்து ஒரு பாராட்டுக் கூட வராதது, ‘உள்ளூர் திறமைகளை’ அரசாங்கம் முறையாகக் கொண்டாடுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
சாதனை படைத்த மாணவர்களுக்குத் தகுந்த அங்கீகாரம் வழங்கப்படுவது, அவர்களின் எதிர்கால முயற்சிக்கு உத்வேகமாக அமையும். எனவே, கல்வி அமைச்சும் அரசாங்கமும் இனப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்த இளம் சாதனையாளர்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க முன்வர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மலேசியர்களின் எதிர்பார்ப்பாகும்.
தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த இந்த மாணவர்களின் அனைத்துலக சாதனையை அரசாங்கம் அங்கீகரிக்காதது குறித்து பலர், பகிரங்கமாக காணொளிகளில் தங்கள் ஆதங்கத்தையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.








