Feb 21, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரத் தயார்: அமைச்சர் ரஃபிஸி ரம்லி அதிரடி எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரத் தயார்: அமைச்சர் ரஃபிஸி ரம்லி அதிரடி எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.21-

சுமார் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மென்பொருள் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படாவிட்டால், அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப் போவதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், தாம் பொருளாதார அமைச்சராக இருந்த போது நாட்டின் பொருளாதாரத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவோ அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி லாபம் ஈட்டியதாகவோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

நேற்று நடைபெற்ற Yang Berhenti Menteri எனும் வலையொளி நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாகத் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதில் தொடர்புடைய மற்ற அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளையும் நீதிமன்றத்திற்கு இழுக்கப் போவதாக எச்சரித்தார்.

இந்த விசாரணையின் நோக்கம் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தருவதல்ல, மாறாக என் மீது ஒரு தவறான தோற்றத்தை உருவாக்குவது மட்டுமே என்று ரஃபிஸி குற்றம் சாட்டினார்.

விசாரணையின் முடிவில் தன் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாவிட்டால், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் அரசாங்கத்திற்கு எதிராக நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக அவர் உறுதியளித்தார்.

Related News