இந்தியாவிலிருந்து பிரபல நடிகர்கள், நடிகைகள், இசையாமைப்பாளர்கள், கலைஞர்கள் என திரைப்படத்துறையை சேர்ந்த பிரபலங்களை மலேசியாவிற்கு அழைத்து வந்து மாபெரும் தமிழ் கலை நிகழ்ச்சிகளை படைப்பதில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக விளங்கி வரும் மலேசிய தொழில் அதிபர் டத்தோ மாலிக் டஷ்திகீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இன்று அதிகாலையில் அவரை கைது செய்தது. மாலிக் ஸ்ட்ரீம் கொர்பொரேஷன் சென்டிரியான் பெர்ஹாட்,மாலிக் மாஜு சென்டிரியான் பெர்ஹாட், மாலிக் ஸ்ட்ரீம் ப்ரொபெர்டீஸ் சென்டிரியான் பெர்ஹாட்,மாலிக் ஸ்ட்ரீம் அந்தென்னா மூவீஸ் சென்டிரியான் பெர்ஹாட் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம் ப்ரொடக்ஷன் டிஸ்ட்ரிபுஷன் முதலிய நிறுவனங்களின் உரிமையாளரான டத்தோ மாலிக் பிடிபட்டதை எஸ்பிஆர்எம் உறுதிபடுத்தியது.
ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை விநியோகம் செய்யும் உரிமையும், அந்தப் படத்தை மலாய் மொழியில் மொழியாக்கம் செய்து விநியோகிக்கும் உரிமையைப் பெற்று, பிரபலம் அடைந்தவரான டத்தோ மாலிக், சட்டவிரோத பண மாற்றத்தை துடைத்தொழிக்கும் 2 முக்கிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதப் பண மாற்றம் தடுப்புச் சட்டம் பயங்கரவாத நிதி அளிப்பு,சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் 2001 ஆம் ஆண்டு அம்லா சட்டத்தின் கீழ் டத்தோ மாலிக் தடுத்து கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஒருவர் “அம்லா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் அவரின் சொத்துக்கள் உடனடியாக முடக்கப்படும். அந்த சட்டத்தின் கீழ் டத்தோ மாலிக், புத்ராஜெயாவில் எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
மாலை 5.00 மணி வரையில் டத்தோ மாலிக் விடுவிக்கப்படவில்லை. அவர் இன்னமும் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார் என்று எஸ்பிஆர்எம் வட்டாரம் தெரிவித்தது.
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, மீசல் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட டத்தோ மாலிக், சிறுவயதில் துணிக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு தமது தொழில் சாம்ராஜ்யத்தை பெருக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. பண மாற்றம், திரைப்பட விநியோகிப்பு, திரைப்படத் தயாரிப்பு, கலைநிகழ்ச்சி ஏற்பாடு, இந்தியாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி உட்பட பலதரப்பட்ட வர்த்தகத்தை டத்தோ மாலிக் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


