லங்காவி, சுங்கை ராயா குடியிருப்புப் பகுதியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீருக்காக போராடி வருகின்றனர். முறையான தண்ணீர் விநியோகமின்றி வேலைக்கு செல்ல முடியாமலும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் தாங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
சடா எனப்படும் கெடா மாநில தண்ணீர் விநியோக நிறுவனம் தங்கள் பிரச்னையை அறவே கண்டு கொள்ளவில்லை என்றும் தங்களை அலைக்கழிக்க வைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டிய அவர்கள், லங்காவி, குவா நகரில் உள்ள சடா அலுவலகம் முன் இன்று திரண்டனர்.
கோவிட் தொற்றுக்கு பிறகு , 2021 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்த சுங்கை ராயா குடியிருப்புப் பகுதியில் ஒரு வாரத்தில் பல முறைகள் முன் அறிவிப்பின்றி தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகின்றது என்று பாதிக்கப்பட்ட இந்திய மக்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர்
அதேவேளையில் தண்ணீர் நிறுத்தப்பட்டதற்கான காரணம் கேட்ட போது சுங்கை ராயாவிற்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள், தண்ணீர் வேகத்தினால் உடைந்து விடுவதாக, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறப்பட்ட அதே காரணத்தை இன்னமும் கூறிக்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுங்கை ராயா பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் முறையிட்டனர்.
லங்காவி சுங்கை ராயாவில் எழுந்துள்ள தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு தேவை என்று அவர்கள் கோரிக்கை விடுத்ததுடன் தங்கள் பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு சடா அதிகாரியிடம் மகஜர் வழங்கியிருப்பதாக குடியிருப்பாளர்களின் ஒருவரான தர்ஷினி திசைகளிடம் தெரிவித்தார்.








