ஜோகூர் பாரு, டிசம்பர்.09-
சராசரி வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக விலை கட்டுப்படியான வீடுகள் கட்டப்படுவதில் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 5 லட்சம் வீடுகள் இலக்கை, மடானி அரசாங்கம் வெற்றிகரமாகத் தாண்டியுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 5 லட்சத்து 11 ஆயிரத்து 544 விலைக் கட்டுப்படியான வீடுகள் கட்டப்பட்டுள்ளன மற்றும் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், 12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு இருந்தது. தற்போது இந்த இலக்கு வெற்றிகரமாகத் தாண்டப்பட்டுள்ளதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஆகிய தரப்பினரின் கூட்டு ஒத்துழைப்பின் காரணமாக மடானி அரசாங்கம் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
முந்தைய எந்தவோர் அரசாங்கமும், இந்தச் சாதனையை எட்டவில்லை என்பதையும் ங்கா கோர் மிங் தெளிவுபடுத்தினார்.
இன்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் பாரு, Vista Tiara Danga Bay- யில் Vista Tiara Johor Bahru வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளுக்கான சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் அடைவு நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.








