கோலாலம்பூர், டிசம்பர்.18-
மலாக்கா துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான கொலை விசாரணையில் ஊகங்கள் அடிப்படையில் கருத்துரைக்க வேண்டாம் என்று சட்டத்துறை அலுலவகம் இன்று பொதுமக்களுக்கு நினைவுறுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை சுற்றியுள்ள பொது விவாதத்தைத் தீவிரமாகக் கருத்தில் கொள்வதாகவும், விசாரணை முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மைப் பாதுகாக்கப்படும் என்றும் சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கொலை விசாரணையாக வகைப்படுத்தப்பட்ட போதிலும் இதில் குற்றவியல் அம்சங்கள் உள்ளன என்று பொருள்படாது. இதுவரையில் எந்தவொரு குற்றவியல் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லை என்று அது விளக்கியது.
விசாரணையில் சமரசம் செய்யக்கூடிய அல்லது நீதித்துறை மீதான நம்பிக்கையைச் சிதைக்கக்கூடிய ஊகங்களையோ, அனுமானங்களைச் செய்யவோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என்று சமூக ஊடக வலைவாசிகள் உட்பட பொதுமக்களுக்கு சட்டத்துறை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.








