சுக்காய், செப்டம்பர்.20-
திரெங்கானு, கெர்தே, செக்ஷன் 5 இல் கிழக்குக் கரையோர ரயில் திட்டமான இசிஆர்எல் EC இருப்புப் பாதை நிர்மாணிக்கும் இடத்தில் பெட்றோனாஸிஸிற்குச் சொந்தமான நிலத்தடி குழாயில் துவாரம் ஏற்பட்டு எரிவாயு கசிந்தது. இதனால் அனைத்து வகையான வாகன போக்குவரத்துக்கு கெர்தே-ரங்கோன் பிரதான சாலை மூடப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 9.53 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றனர் என்று கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ரஸி ரொஸ்லி தெரிவித்தார்.
எளிதில் தீப்பிடித்துக் கொள்ளக்கூடிய butane வகையைச் சேர்ந்த எரிவாயு குழாயில் துவாரம் ஏற்பட்டு, எரிவாயு கசிந்ததாக அவர் குறிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக சம்பவம் நிகழ்ந்த இடம், கிராமங்களின் குடியிருப்புப் பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரமாகும். பொதுமக்கள் மற்றும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முதல் கட்ட எச்சரிக்கை நடவடிக்கையாக பிரதான பாதை மூடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








