Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பணியைத் திறம்பட செய்வதற்கு இனம், தோள் நிறம் ஒரு தடை அல்ல
தற்போதைய செய்திகள்

பணியைத் திறம்பட செய்வதற்கு இனம், தோள் நிறம் ஒரு தடை அல்ல

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.22-

பணியைத் திறம்பட செய்வதற்கு இனம் அல்லது வர்ணம் ஒரு தடை அல்ல என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹான்னா இயோ இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு பிரதேச அமைச்சராகத் தனது நியமனம் குறித்து எழுப்பப்பட்டு வரும் இன ரீதியான விமர்சனங்களைப் புறந்தள்ளிய அவர், "இனம் அல்லது தோல் நிறம் என்பது ஒரு போதும் எனது பணியை வரையறுக்கவோ அல்லது மட்டுப்படுத்தவோ இல்லை" என்று கூறினார்.

தலைமைத்துவம் என்பது ஒருவரின் கொள்கைகள் மற்றும் அவர் அடையும் முடிவுகளைக் கொண்டு அளவிடப்பட வேண்டுமே தவிர, அவரது இனத்தை வைத்து அல்ல என்று ஹான்னா இயோ குறிப்பிட்டார்.

2008-ஆம் ஆண்டு முதல் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர், சிலாங்கூர் சபாநாயகர், சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பல்வேறு அமைச்சுகளில் பணியாற்றிய போது, தனது கவனம் எப்போதும் கொள்கை அமலாக்கம் மற்றும் பணிகளின் முடிவுகள் மீதே இருந்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.

கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் ஆகியவற்றின் தூய்மையான சூழல் மற்றும் தூய்மையான நிர்வாகத்துடன் வழிநடத்துவதே தனது முதன்மை நோக்கம் என்றும், தனது சாதனைகளே அதற்கானச் சான்றாக அமையும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் மலாய்க்காரர் அல்லாதவர் என்ற பெருமையை ஹான்னா இயோ பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News