கூலாய், ஜனவரி.04-
வாகனப் பதிவு எண் பட்டையை மறைத்து விட்டு, வெளிநாட்டு வாகனங்களுக்குத் தடை செய்யப்பட்ட ரோன்95 மானியப் பெட்ரோலைத் திருட்டுத்தனமாக நிரப்பிய நபரை, கூலாய் காவற்படையினர் மின்னல் வேகத்தில் அடையாளம் கண்டு அதிரடி காட்டியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பகிரப்பட்டக் காணொளி ஆதாரத்தை வைத்து, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியைத் தொடர்பு கொண்ட காவற்படையினர், உடனடியாக விசாரணைக்கு வருமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூலாய் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் டான் செங் லீ கூறினார்.
சட்டத்திற்குப் புறம்பாகப் பதிவு எண்ணை மறைத்து அரசு சொத்தைக் கபளீகரம் செய்ய முயன்றது மட்டுமன்றி, விதிமுறைகளை மீறிய அந்த பெட்ரோல் நிலையமும் தற்போது அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. "சட்டத்தின் கண்களில் இருந்து யாரும் தப்ப முடியாது எனக் காவற்படை விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, எல்லை தாண்டி வரும் வாகன ஓட்டிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!








