புக்கிட் மெர்தாஜாம், அக்டோபர்.25-
கடந்த அக்டேபார் 18 ஆம் தேதி சனிக்கிழமை பினாங்கு, ஜுருவில் உள்ள ஒரு வீட்டில் தாயாரும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த மாதுவின் கணவர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள், இன்று நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட கொலையுண்டவர்களுக்கு நன்கு அறிமுகமான 45 வயது நபர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் இரு நபர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் அந்த நபரை 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த இரட்டைக் கொலைகளுக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் முக்கிய சந்தேகப் பேர்வழி உட்பட நேபாள் நாட்டைச் சேர்ந்த மூன்று நபர்களைப் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த மூன்று சந்தேகப் பேர்வழிகள் பிடிபட்டது மூலம் உயிரிழந்த மாதுவின் கணவர், மேலும் ஒரு நபர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.








