கோலாலம்பூர், அக்டோபர்.12-
அடுத்த சபா மாநிலத் தேர்தலில், சபாவிற்கு வெளியே வசிக்கும் சபா வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி பெர்சே உட்பட ஐந்து முக்கிய அரசு சாரா அமைப்புகள் கூட்டாகக் குரல் எழுப்பியுள்ளன. சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய வாக்காளர்களின் சிரமங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்த அமைப்புகள், கடந்த 14 ஆண்டுகளாக இக்கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளன.
பிரதமர் அன்வார் இப்ராஹிமும், தேர்தல் ஆணையமும் சபா வாக்காளர்களின் மக்களாட்சி உரிமையை உறுதிப்படுத்த உடனடியாக அஞ்சல் அல்லது முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக, தேர்தல் ஆணையம் அஞ்சல் வாக்குக்கான விண்ணப்பங்களைத் திறந்திருந்தாலும், இது இராணுவ வீரர்கள், காவற்படையினர், தேர்தல் ஊழியர்கள், வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.








