Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வெளிநாட்டினரை கடத்த கேஎல்ஐஏ 2 விரைவுப் பாதையைப் பயன்படுத்திய பெண் கைது
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டினரை கடத்த கேஎல்ஐஏ 2 விரைவுப் பாதையைப் பயன்படுத்திய பெண் கைது

Share:

சிப்பாங், அக்டோபர்.17-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏ, முனையம் 2 இல் உள்ள குடிநுழைவுத்துறையின் சிறப்பு விரைவுப் பாதையைப் பயன்படுத்தி பல வெளிநாட்டினரை நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டு வருவதற்குக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் உள்ளூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோட்டல் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் 34 வயதான அந்த சந்தேகப் பெண்மணி, விமான நிலையத்தில் நிலையான சோதனைகளைத் தவிர்ப்பதற்காக சிறப்பு விரைவுப் பாதை சிட்டையை பயன்படுத்தி, குடிநுழைவு முகப்பிடம் வாயிலாக ஆறு இந்தோனேசியப் பயணிகளை அழைத்துச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்ததாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டவர்களை நாட்டிற்குள் அழைத்து வருவதற்கு அந்தப் பெண்மணி ஒவ்வொருவரிடம் கணிசமான தொகையைப் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் உட்பட பல நபர்கள் இதே போன்ற முறையைப் பயன்படுத்தி வெளிநாட்டினரைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையை கடந்த ஓராண்டு காலமாக மேற்கொண்டு வந்துள்ளது என்று உளவுத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தோனேசியா, சீனா, வனுவாத்து, கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களை நாட்டிற்குள் கொண்டு வருவதில் இந்த கும்பல் குடிநுழைவுத்துறையின் விரைவு பாதையைப் பயன்படுத்தியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

Related News