கோலாலம்பூரில் வீடற்றோர் பிரச்னைக்கு தீர்வு காண, நடவடிக்கைகளில் மீண்டும் மீண்டும் பிடிபடும் நபர்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து, இந்தச் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்து, குறிப்பாக மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போது அவர்களை நடவடிக்கையில் பிடித்து, மருந்து வழங்கிய பின்னர் மீண்டும் தெருவுக்குத் திரும்பும் நிலை தொடர்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.

கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட கேஎல் ஸ்ட்ரைக் ஃபோர் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஹான்னா இயோ நேரடியாகக் கலந்து கொண்டார். அவருடன் துணை அமைச்சர் டத்தோ லியூ சின் தோங், கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ ஶ்ரீ ஃபட்லுன் மாக் உஜுட் மற்றும் சமூக நல இலாகா, போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு, போலீஸ், குடிநுழைவுத் துறை, சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

புக்கிட் பிந்தாங் போன்ற சுற்றுலாப் பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனநலப் பிரச்னைகளுடன் வீடற்றோர் சாலையோரங்களில் இருப்பது நாட்டின் தோற்றத்தையும் பாதிக்கும் என்பதால், ஒழுங்கமைக்கப்பட்ட வசதிகளுடன் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் ஹன்னா இயோ தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கையில் மீட்கப்பட்டவர்கள், அவர்களின் நிலைமைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனிடையே, சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்து, நீண்டகாலத் தீர்வுக்கான பரிந்துரைகளை அமைச்சரவையில் முன்வைக்கவிருப்பதாக ஹன்னா இயோ தெரிவித்தார்.








