புத்ராஜெயா, ஜனவரி.05-
மடானி அரசாங்கத்தின் கீழ் நிலவும் அமைதி மற்றும் அரசியல் நிலைத்தன்மையானது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே உள்ள ஆழமான ஒருமித்த கருத்தின் வெளிப்பாடு என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
தேசிய ஒருமைப்பாட்டை வெறும் விருப்பமாக மட்டும் பார்க்காமல், நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவையாகக் கருத வேண்டும். எனவே, நாம் கொண்டுள்ள இந்த ஒற்றுமையையும் உறுதியான கலந்தாலோசனைகளையும் யாரும் சிறுமைப்படுத்தவோ அல்லது அற்பமாகக் கருதவோ வேண்டாம் என்று பிரதமர் எச்சரித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு கண்டுள்ள அபரிமிதமான வளர்ச்சிக்கு, ஒற்றுமை அரசாங்கம் ஒரு வலுவான குழுவாகச் செயல்பட்டதே காரணம். நாம் ஒற்றுமையாக இருந்ததால்தான் அசாத்தியமான முடிவுகளை எடுத்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது என அவர் பெருமிதம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பிளவுகள் அல்லது சலசலப்புகள் குறித்துக் கவலைப்படாமல், மடானி அரசாங்கம் மக்கள் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும், இந்த ஒற்றுமை வரும் 16-ஆவது பொதுத் தேர்தல் வரை நீடிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஒற்றுமையே நாட்டின் பலம். அதனைப் பாதுகாப்பதே ஒவ்வொரு மலேசியரின் கடமை என்ற தொனியில் இன்று புத்ராஜெயாவில் ஆற்றிய உரையில் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








