May 4, 2026
Thisaigal NewsYouTube
வெறும் ரொட்டி சானாய் சாப்பிட்டதற்கு 120 ரிங்கிட்  கட்டணமா? விசாரணைக்கு இலக்கானது சிரம்பான் நாசி கண்டார் உணவகம்
தற்போதைய செய்திகள்

வெறும் ரொட்டி சானாய் சாப்பிட்டதற்கு 120 ரிங்கிட் கட்டணமா? விசாரணைக்கு இலக்கானது சிரம்பான் நாசி கண்டார் உணவகம்

Share:

சிரம்பான், பிப்ரவரி.19-

சிரம்பான், Dataran Centrio- வில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தில் தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி நபர் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் சமூக வலைத் தளங்களில் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியதுடன், அந்த உணவகம் தற்போது விசாரணைக்கு இலக்காகியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் 5 நிமிடம் 38 வினாடிகள் கொண்ட காணொளியில், அந்த நபர் தானும் தனது ஊழியர்களும் இரண்டு தனித்தனி மேஜைகளில் சாப்பிட்ட உணவு மற்றும் பானங்களுக்கு ஆரம்பத்தில் 120 ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

அந்தத் தொகையைச் செலுத்திய பிறகு, உணவக ஊழியரிடம் மீண்டும் ஒருமுறை கணக்கிடுமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால் ஊழியர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், சுமார் ஒரு மணி நேரம் தான் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

இருப்பினும், மீண்டும் கணக்கிடப்பட்ட போது மொத்தத் தொகை வெறும் 70 ரிங்கிட் மட்டுமே வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள பணத்தைத் திருப்பித் தருமாறு அவர் கேட்டுள்ளார். அந்த உணவகத்தில் விலைப்பட்டியல் ஏதும் இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், உணவுகளின் உண்மையான விலையையும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து அந்த நாசி கண்டார் உணவகம் தற்போது விசாரணைக்கு இலக்காகியுள்ளதாக நெகிரி செம்பிலான் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குனர் முஹமட் ஸாஹிர் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளருக்கும் உணவகத்தாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீசார் தலையிட வேண்டிய சூழ்நிலைக்கு இலக்கான அந்த உணவகத்தார், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஸாஹிர் மஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட உணவகத்தில் விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விளக்கத்தை அளிக்க உணவகத்திற்கு நான்கு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related News