Apr 3, 2026
Thisaigal NewsYouTube
அபராதத் தொகை விதிப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள்? சட்ட காரணங்களே தவிர மத காரணம் அல்ல - அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அபராதத் தொகை விதிப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள்? சட்ட காரணங்களே தவிர மத காரணம் அல்ல - அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் விளக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.12-

தைப்பூசக் காவடியாட்டத்தைக் கேலி செய்து, இந்து மதத்தை அவமதித்தற்காக ஏரா எப்ஃஎம் வானொலியை நிர்வகித்து வரும் Maestra Broadcast நிறுவனத்திற்கும், இஸ்லாத்தை இழிவுப்படுத்திய நகைச்சுவை நடிகர் ஹாரித் இஸ்கண்டார் மற்றும் செசிலியா யாப் ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையில் உள்ள வேறுபாடுகள், சட்ட காரணங்களே தவிர மத காரணங்கள் அல்ல என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த அபராதத் தொகை விதிப்பு, ஒரு தலைப் பட்சமானது மற்றும் இஸ்லாம் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக சில தரப்பினர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டை அமைச்சர் நிராகரித்தார்.

1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது பிரிவின் கீழ் தனது அறிவிப்பாளர்களின் செயலுக்காக தார்மீகப் பொறுப்பேற்று Maestra Broadcast நிறுவனத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

அதேவேளையில் இஸ்லாத்தை அவமதிக்கும் உள்ளடக்கத்தை முக நூலில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக நகைச்சுவை நடிகர் ஹாரித் இஸ்கண்டார் மற்றும் சமூக ஊடக பிரபலம் செசிலியா யாப் ஆகிய தனிநபர்களுக்கு 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது பிரிவின் கீழ் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

குற்றத்தன்மை ஒரே மாதிரியாக இருந்த போதிலும் அபராதம் விதிப்பில் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? முரண்பாடுகள்? இஸ்லாம் ஒடுக்கப்படுகிறதா? என்று சில தரப்பினர் எழப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் அரசாங்கப் பேச்சாளரான டத்தோ பாஃமி விளக்கம் அளித்தார்.

தனது அறிவிப்பாளர்களின் செயல்களுக்கு Maestra Broadcast நிறுவனம் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் அந்நிறுவனத்திற்கு அபராதம் அதிகமாக விதிக்கப்பட்டது.

ஆனால், ஹாரித் இஸ்கண்டார் மற்றும் செசிலியா யாப் ஆகியோரின் செயல்கள் தனிநபர்களாக வகைப்படுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டனர். அதனால்தான் அவர்களுக்கு அபராதம் குறைவு என்று தமது தொடர்புத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ பாஃமி விளக்கினார்.

இதற்கு மேலோக, 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது பிரிவு, கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் திருத்தப்படுவதற்கு முன்னதாகவே , ஹாரித் இஸ்கண்டாரும், செசிலியா யாப்பும் அத்தகைய குற்றத்தை புரிந்ததால், அந்த சட்டத்திற்கு ஏற்ப அவர்களுக்கு அபராதம் குறைவாக விதிக்கப்பட்டது.

ஆனால், ஏரா எப்ஃஎம் வானொலியின் மூன்று அறிவிப்பாளர்கள் புரிந்த குற்றமோ, மேற்கண்ட சட்ட விதி நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்டப் பிறகு நடந்த சம்பவமாகும்.

எனவே திருத்தப்பட்ட சட்டவிதியின் கீழ் புதிய அபராதத் தொகை 5 லட்சம் ரிங்கிட் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் குறைந்த பட்சத் தொகை 2 லட்சத்து50 ஆயிரம் ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ பாஃமி விளக்கினார்.

இதற்கு மேலாக ஒரு மதத்தை கேலி கிண்டல் செய்த ஏரா எப்ஃஎம் வானொலியை நிர்வகித்து வரும் Maestra Broadcast நிறுவனம், ஒரு தனி நபர் அல்ல. மாறாக, பல ஆண்டு காலமாக அதிகமான வருவாயை ஈட்டிய ஒரு முன்னணி நிறுவனமாகும்.

இந்த அபராத விதிப்பில், அந்த நிறுவனத்தின் நீண்ட கால வருவாயையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அமைச்சர் டத்தோ பாஃமி தெளிவுபடுத்தினார்.

Related News