சிந்தோக், நவம்பர்.09-
உயர்க்கல்வி நிலையங்கள் அரசியல் மேடையாக மாறக் கூடாது; மாறாக அவை அறிவைத் தேடும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, அவதூறுகளைப் பரப்பும் களமாக இருக்கக் கூடாது என்று கெடா மாநில ஆட்சியாளர் சுல்தான் சலேஹுடின் பட்லிஷா வலியுறுத்தினார். கல்வியைப் பயன்படுத்தி அரசியல் செய்வதும், பழி கூறுவதும் மக்கள் நம்பிக்கையைச் சிதைத்து, வருங்காலச் சந்ததியினரின் எதிர்காலத்தைக் கெடுத்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.
பல்கலைக்கழகங்கள் பிளவை ஏற்படுத்தும் சுவர்களாக இல்லாமல், ஒற்றுமைக்கான பாலமாகத் திகழ வேண்டும் என வடமலேசியப் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் சுல்தான் வலியுறுத்தினார். தற்போது உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 491வது இடத்திற்கு உயர்ந்து, தரமான கல்வியிலும் புத்தாக்கத் துறைகளிலும் சிறந்து விளங்கும் வட மலேசியப் பல்கலைக்க்ழகத்தின் சாதனைகள் குறித்து அவர் பெருமிதம் கொண்டார். இறுதியாக, பட்டதாரிகள் தாங்கள் பெற்ற அறிவை விவேகத்துடன் பயன்படுத்தி, சமுதாயத்தைக் கட்டி எழுப்பவும் மக்களை ஒன்றிணைக்கும் மனிதர்களாகவும் விளங்க வேண்டும் என்று Sultan Sallehuddin அறிவுறுத்தினார்.








