May 22, 2026
Thisaigal NewsYouTube
மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்
தற்போதைய செய்திகள்

மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Share:

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபார் பகுதியில் தன்னை நாடி வருகின்ற அடியவர்களுக்கு அருள்மழை பொழிகின்ற எல்லா வல்ல பெரிய நாயகி அம்பிகை உடனுறை இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்தில் சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் மற்றும் திருப்பள்ளியறை சுவாமிகளுக்கான மகா கும்பாபிஷேகம், சுமார் 5 ஆயிரம் பேர் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரியாக நடைபெற்றது.

இக்கும்பாபிஷேகத்தை ஆசீர்வதிக்கும் வண்ணமாக வைரவ பெருமானுக்கும், அவரது விமானமான கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, அபிஷேகம் செய்யும் போது வானத்தில் கருடன் வட்டமிட்டது பலரது கவன ஈர்ப்பாக அமைந்தது. அந்த அதிசய நிகழ்வைக் கண்டு, பலரும் பக்தி பரவசமடைந்தனர்.

இக்கும்பாபிஷேகம், நாதஸ்வர, மேளதாள இசையுடன் காலை மணி 10.00 க்கும் 11.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில், தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் தமிழ் திருமுறையில் நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலையில் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் நாட்டியாஞ்சலியுடன் திருக்குடங்கள் யாகசாலையிலிருந்து புறப்படும் வைபவம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் மகேஷ்வரப் பூஜைக்கு பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

உலகில் மிக சக்தி வாய்ந்த சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் இரண்டு இடங்களில் மட்டுமே வீற்றிருக்கிறார். ஒன்று, தமிழ்நாடு திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திலும், மற்றொன்று, சிரம்பான் தாமான் துவாங்கு ஜாஃபார் இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்திலும் குடிகொண்டு இருக்கிறார்.

கும்பாபிஷேகம் கண்ட வைரவர் சன்னதி, ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலை, தமிழ்திருமுறை சிவாச்சாரியார் ஆகியோரின் ஆலோசனை பேரில் கட்டப்பட்டுள்ளது. ஆலய பூஜைகளும் மேற்கண்ட ஆன்றோர்களின் ஆலோசனையின் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News