சிலாங்கூர், தஞ்சோங் காராங், பத்து 7 ( தூஜோ ) பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வளைவு ஒன்றில் டேங்கர் லோரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் சுமார் இரண்டு மணி நேரம் லோரிக்குள் சிக்கித் தவித்தார்.
பயன்படுத்தப்பட்ட கருப்பு எண்ணெயை ஏற்றிச் சென்ற டேங்கர் லோரி சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
அதிகாலை 12.58 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தஞ்சோங் காராங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட 30 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர், நீண்ட நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அதிகாலை 2.51 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.








