நேபாளத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் குடும்பத்தினர், அவர்களின் நிலை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து தெளிவான தகவல்களை வழங்குமாறு விஸ்மா புத்ராவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரிடர் நிகழ்ந்து 33 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் உள்ளார்களா? என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாயமானவர்களில் 33 வயது சுகுணா பாலன் என்பவரின் அத்தை எஸ். புனிதா, சுகுணாவில் நிலை குறித்த நிச்சயமற்ற தன்மையுடன், நிதி மற்றும் மன அழுத்தத்தையும் எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸுகுன தனது குடும்பத்தின் முக்கிய வருமான ஆதாரமாக இருந்ததாகத் தெரிவித்த அவர், குடும்பம் அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்க தெளிவான தகவல்கள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாயமானவர்களின் பயணப் பைகள் அல்லது தனிப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் தங்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாயமான 74 வயதான வி. கிருஷ்ணன் என்பவரின் மருமகன் எம். சுப்ரமணியம் கூறுகையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்கலாம் அல்லது இதுவரை அடையாளம் காணப்படாத முகாம்களில் தங்கியிருக்கலாம் என்ற நம்பிக்கை குடும்பத்தினரிடம் தொடர்ந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேபாள - சீன எல்லையின் இருபுறங்களிலும் நடைபெறும் தேடுதல் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், அந்தக் குழுவினர் பேரிடருக்கு முன்பு திபேத் குடிநுழைவுச் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
55 மலேசியர்களின் குடும்பத்தினருடன் வெளியுறவு அமைச்சு நடத்திய இன்றைய சந்திப்பு, பேரிடருக்குப் பின்னர் நடைபெறும் இரண்டாவது அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.








