கோலாலம்பூர், ஜூலை.26-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் பேத்தி வீட்டில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், டாமன்சாரா ஹையிட்ஸ், புக்கிட் லேடாங்கில் உள்ள துன் மகாதீரின் மூத்த மகன் மிர்ஸான் மகாதீர் வீட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது, அவரின் மகளும், பணிப் பெண்ணும் இருந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில் 18 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அது மிர்ஸான் மகாதீருக்குச் சொந்தமான வீடு என்ற போதிலும் அந்த வீட்டில் அவரின் 29 வயது புதல்வி தங்கியிருப்பதாக டத்தோ முகமட் உசோஃப் குறிப்பிட்டார்.
வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் சோதனை அறிக்கையை போலீஸ் துறை ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.








