ஈப்போ, அக்டோபர்.08-
பேரா, தெலுக் இந்தான் வட்டாரத்தில் வெள்ளத் தடுப்புக்கான முதலாவது சிறப்புக் கூட்டத்திற்கு பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் தலைமையேற்றார்.

மழைக்காலம் தொடங்கியுள்ள வேளையில் வெள்ளத் தடுப்புக்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராயும் பொருட்டு நடைபெற்ற இந்த சிறப்புக் கூட்டத்தில் தெலுக் இந்தான் மாவட்டத்தின் பல்வேறு அரசு ஏஜென்சிகள் பங்கேற்றன.
மழை வருவதற்கு முன்பு குடையைத் தயார்படுத்துங்கள் என்ற முதுமொழிக்கு ஏற்ப கனத்த மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அரசு ஏஜென்சிகளுக்கு இடையில் இருக்க வேண்டிய ஒத்துழைப்பை அதிகரித்தல், ஒதுக்கப்படும் நிதியின் ஒவ்வொரு காசும், முறையாக வெளிப்படையாகப் பயன்படுத்துவதை உறுதிச் செய்தல் முதலிய விவகாரங்களை வூ கா லியோங் பகிர்ந்து கொண்டார்.

மழைக் காலத்தில் தெலுக் இந்தான், பாதுகாப்பாகவும், வளப்பமாகவும் மாற்றுவதற்காக வடிகால்கள், பள்ளங்கள், நீர்த் தேக்கங்கள் மற்றும் மதகுகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு அரசு ஏஜென்சிகளுக்கு தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரமான ங்கா கோர் மிங் 6 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து இருப்பதையும் வூ கா லியோங் விளக்கினார்.








