சிப்பாங், அக்டோபர்.02-
காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற “Global Sumud Flotilla” எனும் அனைத்துலகக் கப்பலை இஸ்ரேல் படையினர் சிறைப் பிடித்துள்ள வேளையில் அந்த மனிதாபிமான பயணத்தில் இடம் பெற்ற மலேசியர்களை மீட்கும் முயற்சியாக அரச தந்திர சகாக்களைத் தொடர்பு கொண்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருக்கிறார்.
துருக்கி, எகிப்து மற்றும் சவூதி அரேபியாவின் தூதரகச் சகாக்களைத் தொடர்பு கொண்டு பிரதமர் பேச்சு வார்த்தையில் ஈடுபடவிருப்பதாக Sumud Nusantara கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அராபி அப்துல் அலிம் அராபி தெரிவித்தார்.
மனிதநேய அடிப்படையில் நிவாரணப் பொருட்களுடன் காஸாவை நோக்கிச் சென்ற “Global Sumud Flotilla” கப்பல், இஸ்ரேல் படையினரால் வழிமறிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் 8 மலேசியர்கள் உட்பட ஆசியான் மற்றும் அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த 200 தன்னார்வலர்கள் உள்ளனர். அந்தக் கப்பல் தற்போது இஸ்ரேலின் பிடியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் குழந்தைகளுக்கான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








