ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.08-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தன் காதலனுடன் ஏற்பட்ட தொடர்பினால் பிறந்த குழந்தையைப் பிரசவித்த அன்றே அடுக்குமாடி வீட்டிலிருந்து தூக்கி எறிந்த 23 வயதுடைய கல்லூரி மாணவி எம். சந்தியாவிற்கு பினாங்கு உயர் நீதிமன்றம் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
அந்தக் கல்லூரி மாணவிக்குச் சிறைத் தண்டனை விதிப்பதில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ரோஃபியா முகமட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த கல்லூரி மாணவி 3 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தது, தான் பிரசவித்த குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்ததும், பெரும் மனவலிக்கு ஆளாகியுள்ளார். கிட்டத்தட்ட பித்துப் பிடித்தவரைப் போல பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்த சம்பவத்தினால் தமக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டு இருப்பதை நினைத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்துள்ளார் என்று நீதிபதி ரோஃபியா முகமட் தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் அந்த மாணவி தொடர்பாக கிடைக்கப் பெற்ற மருத்துவ மற்றும் சமூக நல அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான இடர்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் செய்த குற்றத்திற்கு அந்த மாணவிக்கு சிறை வடிவில் தண்டனை கொடுப்பதை விட அவருக்கு இப்போதைக்கு தேவைப்படுவது மறுவாழ்வு என்று நீதிபதி ரோஃபியா முகமட் தமது தீர்ப்பில் கூறினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு 18 வயதுடைய ஒரு கல்லூரி மாணவியான சந்தியா, பினாங்கு பண்டார் பாரு ஆயர் ஈத்தாமில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தான் பிரசவித்தக் குழந்தையைத் தூக்கி எறிந்து கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
இவ்வழக்கில் சந்தியா சார்பில் வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர் ஆஜராகியிருந்தார்.








