சிரம்பான், டிசம்பர்.18-
நெகிரி செம்பிலான், கோல பிலா, துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றி வந்த 33 வயது டாக்டர் எஸ். சிந்துஜா, நேற்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமுற்றது தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் 41 ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸாஹார் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை காலை 8 மணியளவில் சிரம்பான், ஜாலான் சிரம்பான் – கோல பிலா சாலையில் புக்கிட் பூத்துஸ் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் டாக்டர் சிந்துஜா பயணித்த பெரோடுவா பேஸா கார், வளைவு ஒன்றில் நிலைதடுமாறி எதிரே வந்த புரோட்டான் எஸ்யுவி வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
எஸ்யுவி வாகனத்தைச் செலுத்திய 45 வயது மதிக்கத்தக்க பெண் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சிரம்பான் போக்குவரத்து போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அதே வேளையில் இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அது குறித்து தகவல் தெரிந்த சாட்சிகள் யாராவது இருந்தால், புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் தியூ சுவான் ஜியேவை 014-9668399 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி அஸாஹார் கோரிக்கை விடுத்துள்ளார்.








