நெகிரி செம்பிலான், பகாவ், தேசிய இடைநிலைப்பள்ளி ஒன்றில் 16 வயது இந்திய மாணவன் ஒருவன் கண்ணாடித் துண்டைப் பயன்படுத்தி கழுத்து, கைகளில் வெட்டிக் கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் அந்த மாணவனை பகடிவதை செய்ததாக கூறப்படும் அப்பள்ளியை சேர்ந்த இரு ஆசிரியர்கள் மீது கல்வி இலாகா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாணவனின் பெற்றோர் நடராஜா கல்யாணி தம்பதியர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய கல்வியாண்டு தொடங்கி இரண்டாவது நாளான நேற்று முன்தினம் நண்பகல் 12. 30 மணியளவில் சம்பந்தப்பட்ட இந்திய மாணவன், தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சித்த போது அந்த மாணவனை தீயணைப்பு மீட்புப்படையினர் காப்பாற்றி, அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்ல உதவினர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாக ஜெம்புல் மாவட்ட போலீஸ் தலைவர் Hoo Chang Hook தெரிவித்தார். மாணவி ஒருவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நடந்து உண்மையை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமான கடிதத்தை வழங்குமாறு இரு ஆசிரியர்கள் நெருக்குதலை அளித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படும் அந்த மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே சம்பந்தப்பட்ட மாணவனை நேற்று சந்தித்த சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் P. குணசேகரன், இந்த பகடிவதை சம்பவத்தில் இரு ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அந்த மாணவன், சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அதனை பள்ளி அளவில் தீர்த்துக்கொள்ள முற்பட்டு இருக்க வேண்டுமே தவிர இது போன்ற விரும்பத்தகாத சம்பவம் ஏற்படும் அளவிற்கு பள்ளி நிர்வாகம் வழிவிட்டு இருக்கக்கூடாது குணசேகரன் தெரிவித்தார்.








