Jun 28, 2026
Thisaigal NewsYouTube
முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் கைதி சிலாங்கூர் சுல்தானுடன் சந்திப்பு: நெகிழ்ச்சியான தருணம்
தற்போதைய செய்திகள்

முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் கைதி சிலாங்கூர் சுல்தானுடன் சந்திப்பு: நெகிழ்ச்சியான தருணம்

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.04-

மலேசிய வரலாற்றிலேயே சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது PhD எனும் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபரான டாக்டர் மாலிக் யாத்தாம், சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

சிலாங்கூர் அரச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு மிகவும் அமைதியாகவும், உணர்ச்சிகரமாகவும் அமைந்தது. சிலாங்கூர் சுல்தானால் முழு மன்னிப்பு வழங்கப்பட்ட ஒரு முன்னாள் கைதி, சுல்தானைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2001-ஆம் ஆண்டு, தனது 14-வது வயதில் சிறைக்குச் சென்ற மாலிக், 'சுல்தானின் கருணைக்காகக் காத்திருக்கும் கைதியாக சுமார் 24 ஆண்டுகள் சிறையில் இருந்தார். குற்றம் நடந்த போது அவர் சிறுவனாக இருந்ததால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை.

காஜாங் சிறையில் இருந்தபடியே விடாமுயற்சியுடன் கல்வி பயின்ற அவர், வணிக நிர்வாகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுச் சாதனைப் படைத்தார். கடந்த 2024 டிசம்பர் 11-ஆம் தேதி, சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலையானார்.

இந்தச் சந்திப்பின் போது மாலிக்கின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்த சுல்தான், அவருக்கு "இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுவது தகுதியானது எனத் தான் கருதியதாகத் தெரிவித்தார். மேலும், குடும்பத்தின் நற்பெயரைக் காக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தொடர்ந்து உழைக்கவும் அவருக்கு அறிவுரை வழங்கினார்.

Related News