கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
நாளை காலை 6 மணி முதல் செப்டம்பர் 30 இரவு 11.59 மணி வரை இகேவிஇ நெடுஞ்சாலை (East Klang Valley Expressway) டோல் கட்டணமின்றி பொதுமக்களுக்காக இலவசமாகத் திறந்திருக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
“மெர்டேகா உற்சாகத்தோடு, நாளை காலை 6 மணி முதல் EKVE நெடுஞ்சாலையில் அடுத்த 30 நாட்கள் டோல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அம்பாங் டோல் பிளாசாவில் எக்ஸ்பிரஸ்வேயின் முதல் பகுதியை இன்று ஆகஸ்ட் 29-ல் திறந்து வைத்த அன்வார் தெரிவித்தார்.
சுமார் 24 கிலோமீட்டர் நீளமுடைய எக்ஸ்பிரஸ்வேயின் முதல் பகுதியில் சுங்கை லோங், பண்டார் மாஹ்கோத்தா செராஸ், உலு லங்காட் மற்றும் அம்பாங்கில் அமைந்த நான்கு இணைப்புகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், எக்ஸ்பிரஸ்வேயின் இரண்டாம் பகுதியின் பணிகள் தாமதமின்றி விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் இன்று வலியுறுத்தினார்.
“போக்குவரத்து நெரிசல் ஏற்கனவே உச்சத்தை எட்டியுள்ளது. கோலாலம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் போக்குவரத்து மிகக் கடுமையாக உள்ளது. எனவே, இவ்வகை அதிவேகச் சாலைத் திட்டங்கள் அதிகச் செலவுகள் இருந்தாலும் தாமதமின்றி விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்,” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
“கல்வி மற்றும் சுகாதாரத்துடன் சேர்த்து, பொது வேலைகள் மற்றும் போக்குவரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மலேசியா ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக மாறிவிட்டதால், இத்தகைய வசதிகள் இப்போது உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளுக்கும் அத்தியாவசியமானதாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.
அவ்விழாவில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி மற்றும் அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








