கோலாலம்பூர், செப்டம்பர்.12-
மாவட்ட போலீஸ் தலைவர் காயம் அடையும் அளவிற்கு கம்போங் சுங்கை பாருவில் நிகழ்ந்த மோதல் சம்பவத்திற்கும், பதற்ற சூழ்நிலைக்கும் வெளிநபர்களின் தலையீடும், தூண்டுதலும் இருந்துள்ளது என்று கோலாலம்பூர் சமூக நல அமைப்பு ஒன்று கூறுகிறது.
நேற்று நடந்த கலவரத்தில், வெளிநபர்களின் தூண்டுதல் இருந்ததன் காரணமாகவே அது மோதலுக்கு வித்திட்டுள்ளது. உள்ளுர் மக்கள் அந்த குடியிருப்புப் பகுதியைக் காலி செய்து விட்டு, இட மாற்றத்திற்கு மேம்பாட்டாளர் வழங்க முன்வந்துள்ள இழப்பீட்டை பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று அந்த அமைப்பின் தலைவர் ஹுசேன் ஸுல்கராய் தெரிவித்தார்.
பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் புரிந்து கொண்டு தங்கள் வீடுகளைக் காலி செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். சிலர் வெளியேறி நியாயமான இழப்பீட்டைப் பெற்றுள்ளனர். இதில் மேம்பாட்டாளரால் வழங்கப்படும் தற்காலிக வாடகை அலவன்ஸ் தொகையும் அடங்கும்.
எதிர்ப்பைத் தூண்டும் நோக்கத்துடன் வெளியாட்கள் தலையீடு இருந்ததால் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு போராடத் தொடங்கினர். இதன் விளைவாகவே பதற்றமும், மோதலும் ஏற்பட்டுள்ளது என்று அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் போலீஸ்காரர்களை நோக்கி கலகக்காரர்கள், கற்களை வீசியதால் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமானின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, நிலைமையை மேலும் மோசமாக்கியதாக அவர் கூறினார்.








