பத்து காவான், செப்டம்பர்.29-
சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட தொலைத் தொடர்பு கோபுரத்தின் மீது பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் குளவிகளின் அச்சுறுத்தலுக்கு ஆனானார்.
இன்று மதியம் 12 மணியளவில் பினாங்கு, பத்து காவான் தொழில்பேட்டை பூங்காவில் லிங்காரான் கசுவா செலாத்தான் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் தீயணைப்பு மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையினால் 29 வயதுடைய அந்த பாகிஸ்தான் ஆடவர் காப்பாற்றப்பட்டார்.
தொலைத்தொடர்பு கோபுரத்தின் முதலாவது பத்து மீட்டர் உயரத்தில் குளவிக் கூடு இருப்பதை அறியாமல் உயரே ஏறிவிட்ட அந்த பாகிஸ்தான் ஆடவர், குளவிகள் சரமாரியாகப் பறக்கத் தொடங்கிய போதுதான், ஆபத்தின் தன்மை அறிந்து, கீழே உள்ள பணியாளர்களுக்குத் தகவல் அனுப்பியதாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள், குளவிகள் துளைக்காத பாதுகாப்பு உடையை அணிந்த நிலையில் அந்த தொலைத் தொடர்பு பணியாளரைப் பாதுகாப்பாக மீட்டதாக அவர் மேலும் கூறினார்.








