கோலாலம்பூர், அக்டோபர்.25-
ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் தோற்றுநர் டான் ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ், சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதற்கு முடிவு செய்ய்துள்ளார்.
பொய்யான செய்திகள், தொடர்வதைக் கண்டு தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், சமூக ஊடகங்களின் கணக்குகளை மூடுவதென முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தமக்குச் சொந்தமான திரெட்ஸ் கணக்கை மூடி விட்டதாகவும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இன்று மூடுவதாகவும் தமது முகநூலில் டோனி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் தமக்கு விருப்பமானவை என்று குறிப்பிட்டுள்ள Capital A நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான டோனி, தமது விருப்பமான பொழுது போக்கிற்கு அது சிறந்தத் தளமாக விளங்கியது என்றார்.
ஆனால், பொய்யான நிறைய ஏமாற்று வேலைகளுக்குத் தாம் பலிகடாவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலே இத்தகையப் பொய்யான செய்திகளுக்கு, மூன்று சமூக ஊடகங்களுக்கும் பிரதானச் சொந்தக்காரராக விளங்கும் மேத்தா முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும் என்றார் டோனி .
ஆசியாவில் பல பகுதிகளில் ஏமாற்று வேலைகளும், மோசடிகளும் நிகழ்வதாக நாம் பேசி வருகிறோம். ஆனால், மேத்தா கொண்டுள்ள மிகப் பெரிய மொத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அவற்றைத் தடுத்து இருக்க முடியும் என்று டோனி குறிப்பிட்டார்.
அதே வேளையில் தமக்கு எதிராகக் கூறப்பட்டு வரும் எதிர்மறையான விமர்சனங்களைக் கண்டு தாம் மூன்று சமூக ஊடகங்களின் கணக்குகளையும் மூடவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
“அத்தகைய விமர்சனங்கள், நாள் மேலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்பதற்கு பெரும் உந்துதலாக இருந்தது. போதுமான அளவிற்கு என்னை மகிழ்ச்சிப்படுத்தியது. அவர்கள் தந்த ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டோனி குறிப்பிட்டுள்ளார்.








