ஷா ஆலாம், பிப்ரவரி.08-
வெளிநாட்டு விருந்தினர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்குத் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும், இது தொடர்பாகப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலுக்குச் செய்தி அனுப்பியுள்ளதாகவும் அன்வார் கூறினார்.
"கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவிக்கலாம், இந்த நாட்டில் அதற்குச் சுதந்திரம் உண்டு. ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்குத் தொந்தரவு கொடுத்து, அரசு விருந்தினர்கள் இங்கு இருக்கும் போது நிலைமையைச் சிக்கலாக்க முயன்றால், என் மீது நம்பிக்கை வையுங்கள்; நான் அதிகபட்ச நடவடிக்கை எடுப்பேன், அவர்களைக் கைது செய்து உள்ளே தள்ளுங்கள் என்று அன்வார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோம்பாக், தாமான் மெலாவத்தியில் நடைபெற்ற சிலாங்கூர் பிகேஆர் மாநாட்டில் பேசிய அவர், போராட்டக்காரர்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டக்கூடாது என்றும், தாங்களே சட்டத்தை அமல்படுத்துபவர்கள் போலச் செயல்படக்கூடாது என்றும் எச்சரித்தார்.
"ஒருவருக்கொருவர் வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்படாதீர்கள். சட்டத்தின் கொள்கைகளை மீறாதீர்கள். நீங்கள் நீதிபதியோ அல்லது போலீஸ் படைத் தலைவரோ அல்ல. நீங்கள் போலீஸ் அதிகாரிகளின் வேலையைக் கையில் எடுக்க முயன்றால், நாங்கள் உங்களைக் கைது செய்து சிறையில் அடைப்போம். நம்பிக்கை இல்லையென்றால், முயற்சி செய்து பாருங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள்," என்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அன்வார் சவால் விடுத்தார்.








