சுங்கை பட்டாணி, செப்டம்பர்.13-
பாரிசான் நேஷனலின் முக்கிய உறுப்புக் கட்சியான ம.இகா பெரிக்காத்தான் நேஷனலில் இணையப் போவதாக ஆருடங்கள் வலுத்து வரும் வேளையில் மஇகாவுடன் இன்னும் நிச்சயத்தார்த்தம் நடைபெறவில்லை என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கோடி காட்டியுள்ளார்.
திருமணத்திற்கான பேச்சுவார்த்தை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனலில் மஇகா இணைவது குறித்து அந்த கூட்டணியின் பிரதான கட்சியான பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மிக சூசமாக அறிவித்துள்ளார்.
யார் வேண்டுமானாலும் பெரிக்காத்தான் நேஷனலில் இணையலாம். தடை ஏதும் இல்லை என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துவான் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.








