பட்டர்வொர்த், அக்டோபர்.09-
கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆடவர் ஒருவரின் சடலத்தைப் போலீசார் ஒரு பெரிய பிளாஸ்டிக் பைக்குள் இருந்து இன்று மீட்டுள்ளனர்.
பட்டர்வொர்த், ஜாலான் பெர்மாத்தாங் பாவோ, அம்பாங் ஜாஜார் பகுதியில் ஓர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிக்கு பின்புறம் அந்த ஆடவரின் சடலம் இன்று பிற்பகல் 1.43 மணியளவில் மீட்கப்பட்டது.
அந்த அடுக்குமாடி வீடமைப்பு பகுதியின் பின்புறம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த துப்புரவு பணியாளர் ஒருவர், பிளாஸ்டிக் பைக்குள் சடலம் கிடப்பதைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்ததாக அறியப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சவப் பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள வேளையில் இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.








