சிப்பாங், ஜனவரி.16-
சிலாங்கூரில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்த விசாரணைகள் சாதகமான முன்னேற்றத்தைக் காட்டி வருவதாகவும், இதில் குண்டர் கும்பல் தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் நல்ல முடிவுகளைத் தந்துள்ளன. எனினும், விசாரணையைப் பாதிக்கும் என்பதால் கூடுதல் விவரங்களை இப்போது வெளியிட முடியாது என்று அவர் கூறினார்.
இச்சம்பவங்களைத் தீர்ப்பதில் மலேசிய போலீஸ் படை மீது முழு நம்பிக்கை வைக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். "விசாரணை முடிந்தவுடன் அந்தத் தகவல்களைச் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வோம்" என்று அவர் உறுதியளித்தார்.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, பந்திங் பகுதியில் உள்ள துரித உணவு விடுதி ஒன்றின் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பந்திங், ஓலக் லெம்பிட் (Olak Lempit) தொழில்பேட்டையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்தனர். இது குறித்து மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தடயவியல் அறிக்கையினை போலீஸ் துறை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக டத்தோ ஷாஸெலி கூறினார்.
இன்று வெள்ளிக்கிழமை கேஎல்ஐஏ மாவட்டப் புதிய போலீஸ் துறைத் தலைவரின் பொறுப்பு ஏற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஷாஸெலி கஹார் இதனைத் தெரிவித்தார். இந்த விழாவில், ஏசிபி எம். ரவி புதிய கேஎல்ஐஏ மாவட்டக் காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.








