5 வயது சிறுவனின் உடல் காயங்களுடன் உயிர் இழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவனது தாயாரும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பினாங்கு குளுகோர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் உடல்நலம் குறைவு காரணமாக அருகிலுள்ள கிளினிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அச்சிறுவனின் நிலைமை மோசமாக இருந்ததால் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின் அவன் உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. அவனது உடலில் காயங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் போலிஸ்க்குப் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த 30 வயது தாயாரும், அவரது வங்காளதேசக் காதலரான 34 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டு, ஜூலை 30 ஆம் தேதி வரை மஜிஸ்திரேட் நத்ரத்துன் நயிம் முகமது சைடி உத்தரவின்பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறார் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a)-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக, மாநிலப் போலிஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் தெரிவித்துள்ளார்.








