சுபாங் ஜெயா, டிசம்பர்.13-
கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள டிரெய்லர் லோரி ஒன்று ஹெலிகாப்படரை ஏற்றி வந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் நேற்று இரவு போலீஸ் புகார் ஒன்றைப் பெற்று இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் சான் மாமாட் தெரிவித்துள்ளார்.
அந்த டிரெய்லர் லோரி, ஷா ஆலாம் - கெசாஸ் நெடுஞ்சாலையிலிருந்து சுபாங் ஜெயா, பெர்சியாரான் கெவாஜிப்பான் சாலையில் சென்று கொண்டிந்த போது இத்தகைய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில் இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நீண்ட டிரெய்லர் லோரி, ஹெலிகாப்படரை ஏற்றிக் கொண்டு, போதுமான இடைவெளியின்றி மிகச் சிரமான சூழ்நிலையில் அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியுள்ளது. இதனால் அம்புலன்ஸ் வண்டி கூட செல்ல முடியாத அளவிற்கு அசௌகரியத்தை அந்த கனரக வாகனம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.








