சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்.12-
தன்னுடன் பயிலும் சக மாணவியைப் பகடி வதை செய்து, அந்த மாணவியின் கைகால்களைக் கட்டி, பள்ளியின் கழிப்பறையில் போட்டு விட்டுச் சென்ற மாணவி, நாளை புதன்கிழமை சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
கடந்த ஜூலை 14 ஆம் தேதி சுங்கை பட்டாணியில் ஓர் இடைநிலைப் பள்ளியில் நடந்த இந்தச் சம்பவத்தில், பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் தனது மகளைக் காணாதது குறித்து அந்த மாணவியின் தாயார் அச்சம் அடைந்தார்.
பின்னர் பாதுகாவலரின் அனுமதிப் பெற்று ஓர் ஆசிரியரின் உதவியுடன் பள்ளியின் வகுப்பறைகளில் தேடிய அந்த மாது, கடைசியில் தனது மகள் கை, கால் கட்டப்பட்ட நிலையில் தனியொரு நபராக பள்ளிக் கழிப்பறையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவி ஒருவர், விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








