பெட்டாலிங் ஜெயா, ஜூன் 22-
தாம் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக தலைமையேற்றப் பின்னர் 2018 ஆம் ஆண்டு லண்டனில் இஸ்ரேலுக்கு ஆதரவானவர்கள் என்று கூறப்படும் BlackRock inc. நிறுவனத்தின் பொறுப்பாளர்களை சந்தித்தப் போது அவர்களுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மலேசியா செய்து கொள்ளவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான Black Rock inc. தலைவர்களை சந்தித்தது உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ள துன் மகாதீர், மலேசியாவின் பொருளாதார முன்னெடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தை அவர்களுடன் நடத்தப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை என்று துன் மகாதீர் விளக்கினார்.
மலேசியாவின் விமான நிலையங்களை நிர்வகித்து வரும் MAHB எனப்படும் Malaysia Airport Holdings Berhad நலன் சார்ந்த பங்குகளை வாங்குவதற்கு BlackRock- திட்டமிட்டுள்ளதாக சில தரப்பினர் கூறி வருகின்றனர்.
இதற்கு அம்னோ உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு BlackRock நிறுவனத்தின் தலைவர்களை தாம் சந்தித்ததை துன் மகாதீர் தற்காத்துப் பேசியுள்ளார்.








